Jan 12, 2011

விதியின் வினை


நீ வேண்டாம் என்று உன் நினைவாக இருந்த
சின்னம் யாவையும் அழித்தேன்- ஆனால்
உன் நினைவு என் உள்ளத்தில்
அழியாத ரணமாய் என்னைக் கொல்கிறது..
அதை எப்படி அழிப்பது,...
என் உயிரைக் கொடுத்தா?

நடக்காது என்று தெரிந்தும்
என்னை ஏன் நாடுகிறாய்?
காலம் செய்த கோலத்தால்
விதியின் விளையாட்டால் பிறந்தேன்
நான் உன்னை ஏமாற்றவில்லை

நான் உன்னை சேர முடியாது
என்று தெரிந்தும் ஏன் காத்திருக்கிறாய்?
காதலை நினைத்து காலத்தைக்
கடத்தாமல் கடமையை தொடர்ந்திடு
காலம் பதில் சொல்லும் பார் ...


எமது உறவு விடையில்லா வினாவாகியது
விதி எம்மை வென்று விட்டது
இன்னும் என்னுடன் கை சேர்க்க
வேண்டும் என்று எண்ணாமல்
என்னில் இருந்து விலகிவிடு

கடந்ததை மறப்பது கடினமென்றால்
காதலையே மறந்து விடு
நிஜம் எதுவென்று தெரியாமல்
நிழல்களை தேடுகிறாய்


இத்தனையும் உனக்காக
சொல்லும் ஆறுதல் அல்ல
எனக்காகவும் தான் ...
நான் வேண்டாம் விலகி விடு...
என்னை மறந்து விடு...
மன்னித்து விடு ......




Jan 6, 2011

எதிர்பார்ப்பு


எழுதினேன் கவிதைகள் எராளமாக- பார்த்து
மனம் திறந்து பாராட்டினாய் தாராளமாக
எழுத்தில் வடித்தேன் என் இதயத்தை - அதை
நீ பார்க்க கொண்டேன் மயக்கத்தை - என்
நெஞ்சில் நிறைத்தாய் ஏக்கத்தை - உன்
காதலை சொல்ல காட்டினாய் தயக்கத்தை
மெதுவாக இழந்தேன் என் உடல் இயக்கத்தை
இப்போழுது எதிர் பார்க்கிறேன் என் மரணத்தை!

ஏன்?


உன்னை நெருங்கி வந்த போது
என்னை விட்டு விலகி சென்றாய்
உன்னை விட்டு விலகி செல்லும் போது
என்னை நெருங்கி வருகிறாயேடா
நான் நினைத்த எதுவுமே
நினைத்த போது நடக்காதாடா?

Jan 3, 2011

சினேகிதியே....


கனவிலோடும் கடவுளை
கண்டிட வேண்டும்- நாம்
பிரியாவரமொன்றை
வாங்கிட வேண்டும்!

விழியோரம் வழிகின்ற
நீராக வேண்டும் - உன்
மடி மீது தானே- என்
மரணம் வேண்டும்!

யாரோடு வாழ்ந்தாலும் - நீ
நலம் வாழ வேண்டும்
என் நினைவாக ஜென்மங்கள்
எல்லாம் நீயே வேண்டும்!

இவ் ஜென்மம் நம் உறவு
பிரிந்திட நேர்ந்தாலும் - மறு
ஜென்மம் உன் மகனாய்
பிறந்திட வேண்டும்!

தாயாய் நீ என்னை
தாலாட்ட வேண்டும்
சேயாய் உன்மடியில் - நான்
தூங்கிட வேண்டும்!

செல்ல குறும்புகள் -நான்
செய்ய வேண்டும்
சிரித்தபடி நீ என்னை
அணைத்திட வேண்டும்!

தவறுகள் நான் செய்தால்
நீ தண்டிக்க வேண்டும்- நீ
தண்டித்து நான் அழுதால்
அன்பாய் தலை கோத வேண்டும்!

தாய் உறவாக ஜென்மங்கள் - நீ
வாழ வேண்டும் - சேய்
உறவாக உன் மடியில்
உயிர் போக வேண்டும்!

வயதாகி விட்டால் இரு கை சுமந்து
குளிப்பாட்ட வேண்டும் - உனை
துவட்டி கூறை கட்டி
அழகு பார்க்க வேண்டும்!

கவிஞர்கள் நம் அன்பை
கவிபாட வேண்டும்
காலங்கள் நம் உறவை
கதையாக்க வேண்டும்!

இது என்ன உறவென்று
நான் கேட்க வேண்டும் - போன
ஜென்மத்து உறவென்று
நீ சொல்ல வேண்டும்!

தேடலின் விடை


என் கண்ணில் உன்னைத் தேடும் போது என் அருகில் நீ இல்லை
என் அருகில் நீ நிற்கும் போது என் இதயம் என்னிடம் இல்லை
எங்கே என் இதயம் என்று தேடும் போது
உன்னிடம் இருப்பதை தெரிந்தேன்
என் கண்கள் மீண்டும் உன்னை நாடிய போது
என்னுள் ஒரு புதிய உணர்வை உணர்தேன்
உன் மார்பில் முகம் புதைத்தேன்
என் வெட்கத்தை எங்கோ தொலைத்தேன்
உன் அணைப்பில் இருந்த அந்த கணம்
உணர்ந்து கொண்டேன் எம் காதலின் மணம்
தொலைந்த என் இதயம் வாழ்க்கையாய் கிடைத்ததே
இந்த ஜென்மத்தின் பலனை என் ஜீவன் அடைந்ததே

Jan 1, 2011

விழி மொழி


மொட்டாக இருந்த என்னை
மலர வைத்ததும் நீ தான்
மலர்ந்த என்னை வாசனையோடு
வாட வைத்ததும் நீ தான்
எட்டியே நின்று பார்க்க முடிந்த உன்னை
கட்டி தழுவ கைகள் ஏங்குகிறது - உன்னை கண்டால்
கைகள் உன்னை தழுவ முதல்- என்
கண்ணீர் உன் காலடி தழுவும் - உன்னை
பிரிந்து நான் பட்ட வேதனையை
அவை உனக்கு சொல்லுமடா

ஸ்பரிஷம்


உன்னை பார்த்ததும் பாதி விழி மூடியது
உன் மூச்சு பட்டதும் முழு விழியும்
இமைக்குள் ஓடி ஒளிந்து கொண்டது
மலைக்க வைத்தது உன் ஆண்மையின் மென்மை
மூடிய விழிக்குள் மலர்ந்தது என் மெல்லிய பெண்மை

ஆவல்


காதலா,
கலங்கி நிற்கும் கண்களும்
தவித்து துடிக்கும் மனசும்
என் தனிமையின் வேதனையும்
ஏன் உனக்கு மட்டும் புரியவில்லை? - இல்லை
புரிந்தும் புரியாதது போல இருக்கிறாயா?

காதலுடன் காத்திருந்த காலம் போய்
கண்ணீருடன் காத்திருக்கிறேன் உன் வருகைக்காக
கண்ணீர் துடைத்து உன்னோடு அணைக்க வருவாயா? - இல்லை
என் கல்லறையில் பூக்கள் தூவ வருவாயா?
உன் கையால் எது செய்தாலும்
என் நெஞ்சம் ஏற்றுகொள்ளுமடா சந்தோசமாக